பதிவு செய்த நாள்
08
மே
2012
10:05
தஞ்சாவூர்: தஞ்சையில், பெரியகோவிலில் சைத்ர பிரம்மோத்ஸவ விழாவையொட்டி சவுராஷ்ட்ரா சங்கத்தினர் சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தினர். இதில், சவுராஷ்ட்ர சபை நிர்வாகிகள், சமூக மக்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர். தஞ்சாவூர் பெரியகோவில் சைத்ர பிரம்மோத்ஸவ 18ம் நாள் விழா தஞ்சை சவுராஷ்ட்ரா சபை சார்பில் வெகுவிமர்சையாக நடந்தது. நான்காம் தேதி காலை 9.30 மணிக்கு ஸ்வாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை ஐந்து மணிக்கு பெரிய கோவில் வாயிலிலுள்ள ராஜராஜசோழன் உருவச்சிலைக்கு சவுராஷ்ட்ரா சபை தலைவர் ராமசுப்பு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். சபை நிர்வாகிகள் துணைத்தலைவர் குப்புராமன், துணைச்செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாலை 6.30 மணிக்கு பஞ்சமூர்த்தி வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடந்தது. முன்னதாக ஒன்றாம் தேதி மாலை ரதோற்சவமும், நான்காம் தேதி மதியம் மற்றும் இரவில் வாழைமட்டையடி விழா, பாயிஸாகேப் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு ஆகியன நடந்தது.
இதில், தஞ்சை சவுராஷ்ட்ரா சபை நிர்வாகிகள், சமூக மக்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஏற்பாட்டை சவுராஷ்ட்ரா சபை தலைவர் ராமசுப்பு தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல, தஞ்சை சவுராஷ்ட்ரா சபைக்கு சொந்தமான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் சவுராஷ்ட்ரா விஜயாப்தம், ஸ்ரீ நந்தன ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. கடந்த மாதம் 24ம் தேதி காலை ஏழு மணிக்கு பாகவத கோஷ்டியுடன் ஸ்வாமி வீதியுலா புறப்பாட்டுடன் விழா துவங்கியது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ நவநீத கிருஷ்ண ரெங்கநாத உற்சவ சபை சார்பில் நேற்று ஏழாம் தேதி ஸ்வாமி திருவீதியுலா நடந்தது. எட்டாம் தேதி இரவு ஏழு மணிக்கு ஸ்ரீ நவநீத கிருஷ்ண அனுமந்த வாகன உற்சவக்குழு சார்பில் ஸ்வாமி உலா நடக்கிறது. தொடர்ந்து 10ம் தேதி, 12ம் தேதிகளில் இரவு ஏழு மணிக்கு ஸ்ரீ நவநீத கிருஷ்ண கஜவாகன சேவா குழு, ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி குதிரை வாகன இளைஞர் கமிட்டி ஆகியவை சார்பில் சார்பில் ஸ்வாமி உலாவும் நடக்கிறது. முடிவில் 14ம் தேதி ஸ்ரீ சவுராஷ்ட்ரா ஸ்ரீ நவநீத கிருஷ்ண சபை சார்பில் காலை ஒன்பது மணிக்கு திருமஞ்சனம், மாலை ஏழு மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை சபை தலைவர் ராமசுப்பு, துணைத்தலைவர்கள் கோவிந்தராம், குப்புராமன், செயலாளர் ராமமூர்த்தி, துணைச்செயலாளர்கள் சுரேந்திரன், பொருளாளர் தேவதாஸ், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் மோகன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.