திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே ரம்ஜான் தொடர்பாக நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடப்பாளையம் கிராமத்தில் 3000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். வரும் மே 23ம் தேதி நடைபெற உள்ள ரம்ராஜனை யொட்டி, பள்ளிவாசலில் தொழுகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார், விரைந்து சென்று, அப்பகுதி இஸ்லாமியர்களிடம், பொதுமக்கள் நலன் கருதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என எடுத்துக்கூறி கொரோனா தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும், கூட்டம் நடத்த வேண்டாம் என அறிவுரை வழங்கி கைகளை கூப்பி வணங்கி கேட்டுகொண்டார். அதனைத் தொடர்ந்து, கூட்டம் நடத்தவில்லை என இஸ்லாமியர்கள்உறுதியளித்தனர்.