பொறுமை என்றாலே நில மகளான பூமாதேவியைத் தான் குறிப்பிடுவோம். ஆனால், பூமித்தாயும் ஒருமுறை பெருமாள் மீது கோபம் கொண்டுவிட்டாள். அவளை சமாதானப்படுத்திய பெருமாள், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான புளியங்குடியில் பூமிபாலராக காட்சி தருகிறார். ஒரு சமயத்தில் மகாவிஷ்ணு பூமிதேவியைப் பிரிந்து, ஸ்ரீ தேவியாகிய லட்சுமியுடன் பூலோகம் வந்து சேர்ந்தார். பெண்களுக்கு கணவனை விட்டுப் பிரிந்திருப்பது என்பது தாங்கமுடியாத அனுபவம். தன்னை விட்டுச் சென்ற பெருமாளின் மீது கோபம் கொண்ட பூமிதேவி, பாதாள லோகம் சென்று மறைந்துவிட்டாள். உலகமே இருண்டு போனது. தேவர்கள் அனைவரும் விஷ்ணுவைத் தேடி ஓடிவந்தனர். விஷ்ணு பாதாளம் சென்று பூமாதேவியிடம், இருதேவியரும் தனக்கு விருப்பமானவர்களே என்று சமாதானம் செய்தார். பூமாதேவியின் கோபத்தைப் போக்கியதால் பூமிபாலர் என்ற சிறப்புப் பெயர் அவருக்கு உண்டானது. பூமிக்கு காசினி என்ற பெயரும் உண்டு. அதனால் காசினிவேந்தர் என்றும் இந்தப் பெருமாளை அழைப்பர். ராமானுஜர் ஒருமுறை புளியங்குடி பூமிபாலர் பெருமாளை சேவித்து விட்டு, ஆழ்வார்திருநகரி செல்ல ஆயத்தமானார். வழியில் நெல் காயப்போட்டு கொண்டிருந்த கோயில் அர்ச்சகரின் மகளான சிறுமியைக் கண்டு, ஆழ்வார் திருநகரிக்குச் செல்லும் வழிகேட்டார். ராமானுஜரிடம் அச்சிறுமி, ""அது கூப்பிடும் தூரம் தான் என்று பதிலளித்தாள்.இந்தப்பதிலைக் கேட்டாரோ இல்லையோ! ராமானுஜரின் மெய் சிலிர்த்துவிட்டது. ஏனெனில், அவள் சொன்ன அந்த வரி, நம்மாழ்வார் பாடிய பாசுர வரிகளின் பொருள்பட அமைந்திருந்தது. இதைக் கேட்டதும், ஆழ்வாரின் பிறந்த தலத்தை அடைந்து விட்ட மகிழ்ச்சியில், அந்தச்சிறுமியின் பாதங்களில் விழுந்து வணங்கியே விட்டார்.