ஆடி செவ்வாய்: அவ்வையார் அம்மனுக்கு கொழுக்கட்டை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2025 11:07
நாகர்கோவில்; ஆடிச் செவ்வாய் தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அவ்வையார் அம்மன் கோயிலில் பெண்கள் கொழுக்கட்டை தயாரித்து வழிபட்டனர்.
ஆடிச் செவ்வாய் தினமான நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடியில் தமிழ் புலவர் அவ்வையாருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு நேற்று அதிகாலை முதலே பெண்கள் அதிக அளவில் குவிந்தனர். நீண்ட கியூவில் நின்று அவ்வையாரை வழிபட்ட பின்னர் கோயில் வளாகத்தில் கூழ், கொழுக்கட்டை, பாயாசம் போன்றவை தயார் செய்து அம்மனுக்கு நிவேத்யம் செய்து வழிபட்டனர். குறிப்பாக கன்னிப் பெண்களும் புதுமண தம்பதிகளும் அதிக அளவில் இங்கு குவிந்திருந்தனர். இதுபோல முப்பந்தல் இசக்கி அம்மன், மண்டைக்காடு, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.