கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா தொடக்கம்; அமைச்சர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2025 05:07
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் திருவாதிரை விழா இன்று தொடங்கியது. பிரகதீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திரசோழனால் கங்கைநதி வரை போராடி வெற்றி பெற்ற சின்னமாக கட்டப்பட்டது. இக்கோயில் உலக பிரசித்திபெற்றது. திருவாதிரை விழாவுக்கு அரியலூர் கலெக்டர் ரத்தினசாமி தலைமை வகித்தார்.
விழாவில், நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது; 2021ம் ஆண்டு முதல் ஆடி திருவாதிரை விழா அவன் பிறந்த நாள் தான் நாம் கொண்டாட வேண்டிய திருநாள் என்று அதை அரசு விழாவாக அறிவித்த பெருமை தமிழக முதல்வரை சேரும். குடவாயில் பாலசுப்பிரமணியம் நீண்ட ஆய்வுக்கு பிறகு திருவாரூர் கல்வெட்டைப் படித்துவிட்டு மிகச் சரியாகச் சொன்னார் ராஜேந்திரன் பிறந்தது மார்கழித் திருவாதிரை அல்ல அது ஆடி திருவாதிரை என்று ஆடி திருவாரூரில் பிறந்த நட்சத்திரத்தை வைத்து இந்த நாளை கொண்டாட வேண்டும் என்ற அந்த சரியான கால கணக்கீட்டை உருவாக்கித் தந்தார். சுமார் 5000 வருடங்களுக்கு முன்பாகவே இரும்பின் பயன்பாட்டை கண்டறிந்த ஒரு இனம் இருக்கிறது என்று சொன்னால் அது தமிழ் இனம் என்பதை நாம் பெருமையாக சொல்ல முடியும் எனவே தமிழனுடைய வரலாற்று பெருமைகளை உருவாக்கக் கூடிய வகையில் இங்கே அகழாய்வுகளை முதல்வர் நடத்துவதற்கு உத்தரவிட்டார். மேலும், அகழாய்வு பணிகளில் கிடைக்கப்பெற்றுள்ள பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக முதல்வர் 22 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் சோழகங்கம் ஏரியினுடைய மேம்பாட்டுக்காக 12 கோடி ரூபாய் என்று இவ்வளவு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழருடைய நாகரீகத்தை பெருமையை தூக்கி பிடிக்க கூடிய வகையில் மாமன்னன் ராஜேந்திரன் உருவாக்கி தந்திருக்கக்கூடிய இந்த வெற்றியினுடைய பெருமையும் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் மட்டுமல்ல உலகமெங்கும் பரவி ராஜேந்திரனுடைய ஆட்சியும் பெருமையும் நமக்கெல்லாம் பாடமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் சிவசங்கர் ராஜேந்திரன் சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.