பதிவு செய்த நாள்
29
ஏப்
2020
12:04
சென்னை:ஊரடங்கு உத்தரவு விலகும் வரை, அன்னதான திட்டம் உள்ள அனைத்து கோவில்களிலும் உணவுப் பொட்டலங்கள் தயாரித்து, பசியால் வாடும் ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என, ஆன்மிகவாதிகளும், பக்தர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுதும், அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள, 754 கோவில்களில் மட்டுமே, அன்னதானத் திட்டம் நடந்து வருகிறது; தினமும், 25 ஆயிரம் பேர் வரை பயனடைகின்றனர். கோவில் பக்தர்கள், 40 சதவீதம் பேர், அன்னதானம் சாப்பிட்டாலும், மீதமுள்ள, 60 சதவீதம் பேர், கோவிலை சுற்றியுள்ள ஏழை எளியவர்கள்.ஊரடங்கு உத்தரவால், பக்தர்கள் தரிசனத்தை தடை செய்து, அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது;
இதனால், அன்னதானமும் நிறுத்தப்பட்டுள்ளது. அன்னதானத்தை நம்பியுள்ள ஏழைகள், ஒருவேளை உணவு கூட கிடைக்காமல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அறநிலைய துறை கமிஷனர், பணீந்திர ரெட்டி வாய்மொழி உத்தரவுப்படி, குறிப்பிட்ட சில கோவில்களில் மட்டுமே, உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. ஆனால், ஊரடங்கு நீடிப்பதால், கூலித் தொழிலாளர்கள் வருமானம் இன்றி, உணவிற்கு தவித்து வருகின்றனர்.அவர்களின் வசதிக்காக, அம்மா உணவகங்கள் இலவசமாக உணவு வழங்கப் படுகிறது; அது, போதுமானதாக இல்லை.எனவே, அன்னதான திட்டம் உள்ள அனைத்து கோவில்களிலும், தினசரி உணவு தயாரித்து, பொட்டலங்கள் வழங்க, கமிஷனர் உத்தரவிட வேண்டும் என, ஆன்மிகவாதிகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.