பதிவு செய்த நாள்
29
ஏப்
2020
01:04
ஸ்ரீபெரும்புதுார், : ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ராமானுஜரின், 1,003ம் ஆண்டு அவதார உற்சவ விழா, கொரோனா ஊரடங்கு உத்தரவால், ரத்து செய்யப்பட்டது. 10 நாட்கள் நடக்கும் உற்சவ விழா நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமானுஜரின் அவதார நட்சத்திரமான, சித்திரை திருவாதிரை அன்று, ராமானுஜருக்கு நடத்தப்படும் திருமஞ்சனம் மற்றும் சாற்றுமுறை விழா மட்டும், குறைவான பட்டாட்சியர்கள் முன்னிலையில், சமூக இடைவெளி விட்டு நடத்த, திட்டமிடப்பட்டது. மேலும், இந்த விழாவை, பக்தர்கள் யு -டியூப் மூலம் நேரடியாக கண்டு ரசிக்க, ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி, ராமானுஜருக்கு, நேற்று நடந்த சித்திரை திருவாதிரை திருமஞ்சனம், சாற்றுமுறை விழாவை, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், யு -டியூப் சேனலில் கண்டு, தரிசனம் செய்தனர்.