ஊட்டி: அன்னதானம் திட்டத்தில் வழங்கப்படும் உணவுகள் பார்சல்களாக தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரியில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஊட்டி மாரியம்மன் கோவில், குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் அன்னதானம் திட்டத்தின் கீழ் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில கூட்டத்தை தவிர்க்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது. பூஜாரிகள் தலைமையில் பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. மேலும், சமூக இடைவெளி கடை பிடிக்கும் நோக்கில் கோவிலில் அன்னதானம் வழங்குவது நிறுத்தப்பட்டது. அதன்படி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில், கோவில்களில் தேவையான அளவு உணவுகளை தயார் செய்து ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வழங்கப்படுகிறது. அங்கிருந்து பக்தர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டு வருகிறது. கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களுக்கு பக்தர்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. தினமும், அன்னதானம் வழங்கும் கோவில்களில 200 பார்சல்கள் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது. என்றனர்.