புன்செய்புளியம்பட்டி: பண்ணாரி போக்குவரத்து துறை சோதனைச்சாவடியில், கொரோனாவை விரட்ட வேப்பிலை தோரணம் கட்டப்பட்டுள்ளது. தமிழகம்-கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக சத்தி-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில், வட்டார போக்குவரத்து துறை, போலீசார் மற்றும் வனத்துறை சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலால், பண்ணாரியில் கூடுதலாக பொதுசுகாதாரத்துறை சார்பில் மருத்துவக்குழுவினரும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பிலும் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து, கர்நாடகா மாநிலத்தில் இருந்து, அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை, சோதனை செய்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடி அலுவலகத்தில், வேப்பிலை தோரணம் கட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தோரணம் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதி வடுகளில் வேப்பிலை தோரணம்,தீபம் ஏற்றப்பட்டது.