பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் சித்திரை திருவிழா ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2020 12:05
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழா வைபவம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மதுரை அழகர் கோவிலுக்கு இணையாக பரமக்குடி பெருமாள் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழா நடப்பது வழக்கம். இதன்படி இன்று விழா காப்பு கட்டுடன் தொடங்கவேண்டும். மே 7 அன்று அதிகாலை பெருமாள் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கி, மறுநாள் காலை குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நாள் ஆகும். அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரை அழகருக்கு பீச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். தொடர்ந்து ஐந்து நாட்களும் வைகையாற்றில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கூடி விழாவை கொண்டாடுவது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோயில் நிர்வாகம் சார்பில் நாடு முழுவதும் ஊரடங்கு பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளதால் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக கோயிலின் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் திருவிழாவையொட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வருத்தம் அடைந்துள்ளனர். இதேபோல் பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.