சித்திரை திருவிழா ரத்து.. வெறிச்சோடிய வைகை: பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2020 05:05
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா ரத்தானதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். தொடர்ந்து அவரவர் வீடுகளிலேயே மாவிளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி மதுரை அழகர் கோவிலுக்கு இணையாக பரமக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். இதன்படி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகராக பூப்பல்லக்கில் வைகையாற்றில் இறங்குவார். மேலும் நேற்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பீச்சாங்குழல் மூலம் மஞ்சள் நீரை பீச்சி அடிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்திருக்கும். தொடர்ந்து தசாவதாரம், வைகையாற்றில் 5 நாட்கள் மக்கள் மகிழ்ச்சியுடன் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்வர். இந்த ஆண்டு தேவஸ்தானம் மூலம் விழா ரத்தானதாக அறிவிக்கப்பட்டு, கோயிலில் வழக்கமான பூஜை நடைமுறைகள் மட்டும் நடந்து வருகிறது. தொடர்ந்து பக்தர்கள் தங்களது வீடுகளிலேயே கள்ளழகர் படத்தை வைத்து மாவிளக்கு ஏற்றி வழிபாடுகளை நடத்தினர். இதனால் பக்தர்கள் வருகை இன்றி பரமக்குடி ஒட்டுமொத்தமாக வெறிச்சோடி காணப்பட்டது.