பதிவு செய்த நாள்
09
மே
2020
12:05
திருப்பதி: திருமலையில் அன்னமாச்சார்யாரின், 612வது ஜெயந்தியை முன்னிட்டு அவர் எழுதிய கீர்த்தனைகள் பாடப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் கடந்த ஏப்.10ம் தேதி முதல் யோகவாசிஷ்டம் என்று பெயரில் மந்திரபாராயணத்தை நடத்தி வருகிறது. அதில், வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தில் உள்ள தன்வந்திரி ஸ்லோகம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. இத்துடன் மாங்கல்ய பாக்கியம் அருளும் மகாலட்சுமி ஸ்லோகம், துர்காபரமேஸ்வர ஸ்லோகம், ஏழுமலையானின் தியான மந்திரம் உள்ளிட்டவையும் பராயணம் செய்யப்படுகிறது.
இதை திருமலையில் உள்ள தர்மகிரி வேதபாடசாலை பிரின்சிபால் சிவசுப்ரமணிய அவதானி அவர்கள் கூற தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் அடங்கிய குழுவினர் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று 29ம் நாள் பாராயணம் நடந்தது. அதற்கு முன்னதாக அன்னமாச்சார்யாரின், 612வது ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு மேடையில் அவர் எழுதிய கீர்த்தனைகள் சிலவற்றை இசை, நடன கல்லுாரி ஆச்சாரியர் வெங்கடேஸ்வரலு பாடினார். பின்னர் அன்னமாச்சார்யாரின் வாழ்க்கை வரலாறு குறித்தும் அவர் எழுதிய 32 ஆயிரம் கீர்த்தனைகள், அவரின் படைப்புத்திறன், அவர் ஏழுமலையான் மீது கொண்ட பக்தி உள்ளிட்டவை குறித்து தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி சிறிது நேரம் உரையாற்றினார். அதன்பின்னர், மந்திர பாராயணம் செய்யப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், தேவஸ்தான ஆகம ஆலோசகர், கங்கணபட்டர், கோயில் இணை அதிகாரிகள், திருமலை செய்தியாளர்கள், தேவஸ்தான ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.