பதிவு செய்த நாள்
10
மே
2020
12:05
புதுடில்லி : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட உள்ள, ராமர் கோவிலுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு, வருமான வரிச் சலுகை கிடைக்கும்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டலாம் என, கடந்த ஆண்டு, நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதையடுத்து, கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன. இதற்காக, தனி அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, பொது மக்கள் நன்கொடை அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறக்கட்டளைக்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு, வருமான வரிச் சட்டத்தின், 80 - சி பிரிவின் கீழ், வரிச் சலுகை வழங்கப்படும் என, மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்துள்ளது. இந்தச் சட்டப் பிரிவின்படி, தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரிச் சலுகை வழங்கப்படும். அயோத்தியில் அமைய உள்ள கோவில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, மக்கள் வழிபடும் தலமாக விளங்கும் என்பதால், இதற்கு வரிச் சலுகை வழங்கப்படுவதாக, மத்திய நேரடி வரி வாரியம் கூறியுள்ளது.