ஒரு நாள் முல்லா தெருவில் நடந்து சென்றார். வழியில் ஒரு குடிசை வாசலை அவர் கடந்துபோது, சத்தம் கேட்கவே உள்ளே நுழைந்தார். அங்கு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள். துணிகளை தைத்துக் கொடுத்து பிழைப்பு நடத்தும் அவளுக்கு, பத்து வயதில் ஒரு மகன் இருந்தான். அவர்களைப் பற்றி முல்லாவுக்கு நன்கு தெரியும் அவர்களின் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு. தாயும், மகனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ‘‘என்ன பிரச்னை?’’ என முல்லா விசாரித்தார். ‘‘இவன் படிக்க மாட்டேன்?’’ என அடம் பிடிக்கிறான்! நான் அறிவுரை கூறியும் கேட்கவில்லை. அடித்தும் பார்த்தேன் மசியவில்லை’’ என்றாள் வேதனையுடன். ‘‘நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமாச்சே? எதிர்காலம் சிறக்க அதுவே உனக்கு நல்லது’’ என புத்திமதி கூறினார். அவன் கேட்பதாக இல்லை. அவன் மாட்டேன் என அடம் பிடித்தான். சுற்றும் முற்றும் பார்த்தார் முல்லா. தைப்பதற்காக சிறுவனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி கண்களில் பட்டது. அதை எடுத்து துண்டு துண்டாகக் கிழித்தார் முல்லா. தாயும், மகனும் அதிர்ச்சி அடைந்தனர். அம்மா.... விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே இந்த முல்லா! எனக் கேட்டான் சிறுவன். பள்ளிக்கூடம் போகமாட்டேன் என எதிர்கால வாழ்வையே பாழாக்குவதை விட விலை உயரந்த துணியை பாழாக்குவது ஒன்றும் பெரிய விஷயமில்லை’’ என பதிலளித்தார். முல்லாவின் சொற்கள் அவனது மனத்தில் பெரும் மாறுதலை உண்டாக்கியது. உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு படிக்கத் தயாரானான். அதன் பிறகு கிழித்த துணிக்குரிய விலையை தாயிடம் கொடுத்து விட்டுப் புறப்பட்டார் முல்லா.