வியாபாரத்திற்காக ஒருமுறை முல்லா நகரத்திற்குச் சென்றிருந்தார். அவருக்குத் துணையாக அங்கே ஒருவன் வந்து சேர்ந்தான். சந்தேகப்பிராணியான அவன் நகரத்தைக் கண்டு பிரமித்தபடி, ‘‘ ஐயா...சந்து பொந்து எல்லாம் இப்படி கூட்டம் நிரம்பி வழிகிறதே...எப்படி போக வேண்டிய இடத்தை மக்கள் அடையாளம் காண்கிறார்கள்?’’ என்றபடியே வந்தான். அந்த சந்தேகப் பிராணியும், முல்லாவும் அன்று இரவைக் கழிக்க ஒரு விடுதியில் தங்கினர். ‘‘காலையில் நான் விழிக்கும் போது என்னையே மறந்தால் என்ன செய்வது? எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள்’’ என பரிதாபமாகக் கேட்டான். முல்லா சிரித்தபடியே,‘‘ நண்பரே கவலைப்படாதீர். கருப்புத் துணி ஒன்றை காலில் கட்டி விடும். காலையில்எழுந்ததும் காலைப் பார்த்தால் துணி இருக்கும். நீர் தான் அது என்பது அடையாளம் தெரியும்’’ என்றார். நல்ல யோசனையாக தோன்றவே, அவனும் காலில் கருப்புத் துணியைக் கட்டிப் படுத்தான். அருகே படுத்த முல்லா அவன் உறங்கிய பின் அந்த துணியை அவிழ்த்துத் தம் காலில் கட்டினார். ‘‘ஐயோ நான் காணாமல் போனேனே. காலில் இருந்த துணியைக் காணோமே’’ என கூக்குரல் இட்டான் சந்தேகப் பிராணி. முல்லாவின் காலைப் பார்த்ததும், ‘‘நான் அகப்பட்டுவிட்டேன் நீர்தான் நான்’’ என சத்தமிட்டான். ஏதோ குழப்பம் நடப்பதை அறிந்த மற்ற பயணிகள் அங்கே கூடினர். நடந்ததை முல்லா விளக்கினார். சந்தேகப்பிராணியைக் கண்ட அனைவரும் வாய் விட்டுச் சிரித்தனர். பின்னர் முல்லா அவனது சந்தேக புத்தியைப் போக்கி நல்வழிப்படுத்தினார்.