தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களை திறக்ககோரிய மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது தொடர்பான உத்தரவில் மத வழிபாட்டு தலங்களை மூடவும், சமய சம்பிரதாய விழாக்களில் பங்கேற்கும் நபர்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன .
இந்நிலையில் 50 நாட்களுக்கும் மேலான ஊரடங்கில் சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டன. வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் மத வழிபாட்டு தலங்கள் மூடுவது, பஸ், ரயில் போக்குவரத்து தொடர்பாக இன்னும் தளர்வுகள் வரவில்லை. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் ஜலீல் என்பவர் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். இந்த மனுவில் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கோரினார். இதற்கு அரசு அளித்த பதிலில்; மத்திய அரசு இது தொடர்பாக தளர்வுகள் இன்னும் அறிவிக்கவில்லை. மேலும் வழிபாட்டு தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். இதற்கென பணியில் ஈடுபடுத்த போதிய போலீசார் இல்லை. இதனால் வழிபாட்டு தலங்களை திறக்க முடியாது என தெரிவித்தது. இதனையடுத்து தொடரப்பட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.