பதிவு செய்த நாள்
19
மே
2020
12:05
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் தேன் எடுக்கும் சீசன் துவங்கியுள்ளதால், குறும்பர் இன ஆதிவாசி மக்கள், மருத்துவ குணம் வாய்ந்த பாறை தேன் எடுக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, மஞ்சூரில், 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், வசிக்கும் குறும்பர் இன ஆதிவாசி மக்களின் முக்கிய தொழிலாக தேன் எடுத்தல் ஆகும். மலை தேனீ எனும் பாறை தேனீக்கள், ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் எடுக்கின்றனர். உறவு முறையை விட்டு கொடுக்காமல், மாமன், மைத்துனன் என சேர்ந்து, மரக்கொடிகளை ஏணி போன்று அமைத்து, செங்குத்தான பாறைகளில், பாறை தேன் எடுக்கின்றனர். ஒரு கிலோ, பாறை தேன், 960 ரூபாய் என வெளி மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. ஆனால் ஆதிவாசி மக்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஆலு குறும்பர் நல சங்க தலைவர் மணி கூறுகையில், "வேளாண் துறை தேன் அறுவடை செய்வதை ஊக்குவித்து வருகிறது. பல்வேறு நோய்களுக்கு எதிரான, நமது உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட, இந்த தேன் சிரமத்திற்கிடையே எடுக்கப்படுகிறது. தெய்வ வழிபாடுகளுடன், தூய்மையான முறையில் எடுக்கும் இவை முதலில் கோவிலில், எடுக்கும் போது கோடை மழை பெய்யும். தொடர்ந்து, தெய்வங்களுக்கு படைத்த பிறகே விற்பனைக்கு வழங்குகிறோம்," என்றார். ஐ.நா. சபை மூலம் ஆண்டுதோறும், மே 20ம் தேதி, உலக தேனீ தினம் கொண்டாடும் நிலையில், தேன் எடுத்து நேரடியாக விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தால், இவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.