பதிவு செய்த நாள்
19
மே
2020
01:05
திருப்பூர்: கோவில் நிலத்தில், தனியார் கட்டுமான பணியை நிறுத்த, கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.இந்து முன்னணி கிழக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், திருப்பூர் கலெக்டரிடம் அளித்த மனு:உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான இடம், காங்கயம், ஊதியூரில் உள்ளது.
100 ஏக்கர் கோவில் நிலத்தை, ஹட்சன் என்ற தனியார் பால் நிறுவனம், போலியாக கிரயம் பெற்று, 2017 முதல் கட்டுமான பணிகளை துவங்கியது. இந்து அறநிலையத்துறை, தங்களுக்கு சொந்தமானது என, தகவல் பலகை வைத்ததுடன், கட்டுமான பணிகளைநிறுத்தவும் உத்தரவிட்டது. பலகையை எடுத்து விட்டு மீண்டும் பணிகளை, பால் நிறுவனம் துவக்கி உள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, மீண்டும் கட்டுமான பணி துவங்கி நடந்து வருகிறது.கோவில் நிலத்தில் நடக்கும் பணிகளை நிறுத்த வேண்டும். பால் பண்ணை கட்டுமானத்துக்கு உண்டான தளவாடங்களை அகற்றவும், இடத்தை முழுமையாக அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கவும் வேண்டும். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.ஹட்சன் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் குறிப்பிட்ட சில இடத்தில் எவ்வித பணியும் நடக்கவில்லை. நிறுவனத்துக்கு பாத்தியப்பட்ட இடத்தில் மட்டுமே பணி நடக்கிறது. முறையாக அனுமதி பெற்ற பின்பே கட்டுமான பணி நடந்து வருகிறது. சிலர் வேண்டுமென்றே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றார்.