பதிவு செய்த நாள்
10
மே
2012
10:05
ஆனைமலை : பொள்ளாச்சி தாலுகாவில் முன்மாதிரியாக, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ராஜகோபுரத்துக்கு, சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கருவறை, உள் மண்டபம், வெளி மண்டபம், ராஜகோபுரத்தை சேர்ந்து, 69 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மாதந்தோறும் சராசரியாக, 600 யூனிட் மின்சாரம் செலவிடப்பட்டு, சராசரியாக 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தப்படுகிறது. மின் கட்டணத்தை குறைக்க, சோலார் மின் விளக்கு அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. உபயதாரர்கள் சிலர் முன்வரவே, முதற்கட்டமாக, கோவில் ராஜகோபுரத்துக்கு, சோலார் மின் விளக்கு அமைக்கப்பட்டது. "அப்துல் கலாம் சேவை அமைப்பின் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், சூரிய சக்தி மின்விளக்கு அமைக்க, கோவில் நிர்வாகத்துக்கு உதவி வருகிறார். ராஜகோபுரத்துக்கு, பொள்ளாச்சி ஹரிராம் ஹோண்டா நிறுவனத்தினர் விளக்கு அமைத்து கொடுத்துள்ளனர். மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ரமேஷ் கூறுகையில், ""விரைவில், 100 பேனல்கள் அமைத்து, கோவில் முழுவதும் சோலார் மின் உற்பத்தியை பயன்படுத்தி, மின்சாரத்தை சேமிக்க உள்ளோம், என்றார். பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள கோவில்களில் முதன் முதலாக, மாசாணியம்மன் கோவிலில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.