பதிவு செய்த நாள்
10
மே
2012
11:05
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் சன்னதிக்கு வெளியில் விபூதி, குங்குமம் வழங்கியதால் பக்தர்கள் வேதனையுடன் குமுறுகின்றனர். கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாதசுவாமிகோவில் உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். சிறப்புமிக்க இக்கோவிலின் உதவி கமிஷனரின் அதிரடி உத்தரவின்பேரில் நேற்று காலை முதல் சன்னதிகளில் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் வழங்குவது நிறுத்தப்பட்டு, சன்னதிக்கு வெளியில் வழங்கப்பட்டது. மூலவர் நாகநாதசுவாமி, விநாயகர், முருகன், தெஷ்ணாமூர்த்தி, உற்சவர் ராகுபகவான், பைரவர் என அனைத்து சன்னதிகளிலும் வழிபட்டு திரும்பும் பக்தர்களுக்கு ஒரு இடத்தில் மட்டும் விபூதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று காலை வழங்கப்பட்டது. இதுபோன்று மற்ற சன்னதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வெளியில் விபூதி, குங்குமம் வழங்கப்பட்டது. இது பக்தர்களிடம் பெருத்த வேதனையை ஏற்படுத்தியது. தீபாராதனை பார்த்ததும் சன்னதியில் வழங்கும் விபூதி பிரசாதத்தை வாங்கி நெற்றியில் இட்டால் தான் முழு திருப்தி கிடைக்கும். இதிலும் நிர்வாகம் தலையிட்டு இவ்வாறு செய்வது பக்தர்களை மிகவும் வேதனையடைய செய்துள்ளது. "எதற்காக வெளியூரிலிருந்து கோவில்களுக்கு வருகிறோமோ அது முழுமையாக நிறைவடைய வில்லை என்ற எண்ணமே ஏற்படுகிறது என்றும் இதற்கு சம்பந்தபட்ட உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழைய நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
தினசரி தரிசனத்திற்கு வரும் உள்ளூர் மக்களும் இந்த அதிரடி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உயரதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினர். இதனால் நேற்று காலை ராகுதலமான நாகநாதசுவாமிகோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த 17 நாட்களாக ராகுபகவான் சன்னதியில் நடைபெற்று வந்த சிறப்பு பரிகார ஹோமங்கள் நடப்பதில்லை. பக்தர்கள் பரிகாரம் செய்ய கோவில் அர்ச்சகரிடம் தெரிவித்தால், அவர்களிடம் ஹோமத்திற்கு உரிய பணத்தினை பெற்று சிவாச்சாரியார், கோவிலுக்கு ஆயிரம் செலுத்திவிட்டு மற்ற பணத்தை கொண்டு ஹோமங்கள் செய்து வந்தனர். இதன் மூலம் மாதம் 40 முதல் 50 ஹோமங்கள் வரை நடைபெற்று வந்துள்ளது. இதன் மூலம் கோவிலுக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வருமானம் கிடைத்துள்ளது. இந்நிலையில் சிறப்பு பரிகார ஹோமம் நடத்துவது என்றால் கோவிலுக்கு ரூபாய் ஐந்தாயிரம் செலுத்தவேண்டும் என்றும், ஹோமத்திற்கு தேவையான சாமான்களை நிர்வாகம் தரும் என்றும் உதவி கமிஷனர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். சிறப்பு பரிகார ஹோமம் மூலம் கொஞ்சம் வருமானம் பார்த்த சிவாச்சாரியார்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் யாரும் கடந்த 17 நாட்களாக பரிகார ஹோமங்கள் நடத்த முன்வரவில்லை. கோவிலுக்கு வரும் பக்தரிடம் பரிகார ஹோமங்கள் செய்யவேண்டும் என்றால் அதை முறையாக வழிநடத்தும் சிவாச்சாரியாரை நிர்வாகம் தண்டிக்கும் பட்சத்தில் எந்த சிவாச்சாரியாரும் சிறப்பு ஹோமத்தில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் சாதாரணமாக கோவிலுக்கு வந்து கொண்டிருந்த சிறப்பு ஹோமம் வருமானமும் தடைபட்டுள்ளது. எனவே, "பக்தர்கள், பொதுமக்கள், சிவாச்சாரியார்கள் ஆகியோரை கலந்து யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு உதவி கமிஷனர் உத்தரவுகள் பிறப்பிக்கவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதற்கு இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.