பதிவு செய்த நாள்
10
மே
2012
11:05
திண்டுக்கல்:மலைக்கோட்டை பத்மகிரி கிரிவல பாதையின் வடக்கு பகுதி, வேலியால் அடைக்கப்பட்டது, பக்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பத்மகிரியில் 2000 ம் ஆண்டு முதல் சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது. திருவண்ணாமலைக்கு புகழ் சேர்த்த ரமண மகரிஷி, பத்மகிரியில் கிரிவலம் வந்தவர். அவரை நினைவுகூரும் வகையில், தமிழ் மாத பவுர்ணமி அன்று, பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அபிராமி அம்மன் கோயிலில் இருந்து சிவபுராண, தேவார பாடல்களை ஓதியவாறு வெள்ளை விநாயகர் கோயில் மெயின்ரோடு வழியாக மாரியம்மன், ஐயப்பன், பத்ரகாளியம்மன், கோட்டை முனீஸ்வரர், அகஸ்திய விநாயகர் கோயில் வழி, ஓதசாமிகள் கோயிலை அடைந்து, அங்கு வழிபாடு நடத்துவர். பின், மலையின் வடக்கு புறமாக சுற்றி வந்து கிழக்கு புறத்தை அடைவர். பக்தர்கள் வலம் வரும் வடக்கு பகுதி, தற்போது வேலியால் அடைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக இதை செய்துள்ளதாக, தொல்பொருள் துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் கிரிவல பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் கிரிவல நாளில் மட்டும் இப்பாதையை திறக்க, மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.