பதிவு செய்த நாள்
10
மே
2012
11:05
சென்னை : பெருமாள் கோவில்களில், தினசரி பூஜைகள், வார மற்றும் மாதாந்திர பூஜைகள், ஆழ்வார்களின் திருநட்சத்திர தினங்கள், பெருவிழாக்கள், சிறு விழாக்களில், வேத பாராயணம் மற்றும் திவ்ய பிரபந்தம் ஓதுதல் ஆகியவை நடந்து வருகின்றன. திருவல்லிக்கேணியில், திவ்ய பிரபந்தம் ஓதும் குழுவில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், சித்திரைப் பெருவிழா நடந்து வருகிறது. இதில், காலை மற்றும் இரவில் பெருமாள் வீதியுலா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த வீதியுலாவில் முதலில், திவ்ய பிரபந்தம் ஓதும் குழுவினர் செல்கின்றனர். அவர்களை பின் தொடர்ந்து, பெருமாள் செல்கிறார். வேதம் ஓதும் குழுவினர், அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து, சென்னைப் பல்கலை வைணவத் துறை தலைவர் வேங்கடகிருஷ்ணன் கூறியதாவது: ஆழ்வார்களின் அமுதத் தமிழ் மீது கொண்ட அளப்பரிய காதலால், அத்தமிழை பாடுவோர் பின்னால் பெருமாள் செல்கிறார். அந்த பெருமாளைத் தேடி, வேதம் பின் தொடர்கிறது என்பது மரபு. அதன்படி தான் வீதியுலாவில், திவ்ய பிரபந்தம் ஓதுவோர் முன்னர் செல்கின்றனர். திவ்ய பிரபந்தம் ஓதும் பணி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில், 700 ஆண்டுகளாக இடையறாது நடந்து வருகிறது. பார்த்தசாரதி, அழகிய சிங்கர் ஆகியோரின் பெருவிழாக்களின் போதும், ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரின் விழாக்களின் போதும், அத்யன உற்சவத்திலும் ஆக, ஐந்து விழாக்களில் இக்குழுவினர், நாலாயிர திவ்ய பிரபந்தத்தை முழுமையாக ஓதுகின்றனர். இவ்வாறு வேங்கட கிருஷ்ணன் தெரிவித்தார்.