பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் எதிரிலுள்ள வாசுகி தீர்த்தக்குளம் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் ஆகும். இங்கு ஆண்டு முழுவதும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். முக்கியமாக கோயில் எதிரில் உள்ள வாசுகி தீர்த்த குளத்தில் தீர்த்தமாடிய பின் கோயிலில் தரிசனம் மேற்கொள்வர். இந்நிலையில் பல ஆண்டுகளாக கோயில் குளம் பராமரிக்கப்படாமல் வீணாகி வருகிறது. இந்நிலையில் படிக்கட்டுகள் அனைத்தும் உடைந்து பக்தர்கள் குளத்தில் இறங்க முடியாத வகையில் ஆபத்தான வகையில் உள்ளது. மேலும் குளத்தை சுற்றி உள்ளவர்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை நேரடியாக கலக்கும்படி விட்டுள்ளனர். ஒவ்வொரு முறை இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இடம் கோரிக்கை வைக்கும்போதும் குளத்தைச் சுற்றி வேலி அமைத்து நடைமேடை அமைக்கப்படும் என தெரிவிக்கின்றனர். ஆனால் குளத்தை பராமரிப்பதில் எந்த முன்னேற்றமும் இன்றி, மழைநீர் சேகரிக்கும் அனைத்து வழிகளும் உடைந்து தண்ணீர் தேக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.