வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பு: பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2020 12:06
புதுச்சேரி : புதுச்சேரியில் நாளை முதல் வழிபாட்டு தலங்கள் திறந்தாலும் பக்தர்களுக்கு பூ, மாலை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் அடைக்கப்பட்டன. நித்யகால பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது.இந்நிலையில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளை 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் ஷாஜகான், தலைமை செயலர் அஸ்வனி குமார், கலெக்டர் அருண் மற்றும் அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் எடுத்த முடிவுகள்:வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்களின் பெயர், முகவரி மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவேட்டில் பெற வேண்டும். அவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்க வேண்டும். முக கவசம் அணிந்திருக்க வேண்டும். கோவில் நுழைவு வாயிலில் வைத்துள்ள தண்ணீர் மற்றும் கை கழுவும் திரவங்களை கொண்டு கை கால்களை கழுவிய பின் உள்ளே செல்ல வேண்டும்.
தரிசனத்திற்கு வரிசையில் நிற்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பூஜை பொருட்கள் கொண்டு வரக்கூடாது. பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் உள்ளிட்ட எந்தவித பிரசாதமும் வழங்கக்கூடாது.வழிபாட்டுதலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். விருந்திற்கு அனுமதி இல்லை. காலணிகளை ஒன்றாக வைக்காமல் தனித்தனியே வைக்க வேண்டும். பக்தர்கள் வழிபாட்டு தலத்தில் எதனையும் தொடக்கூடாது. குளிரூட்டும் சாதனங்களை 24 முல் 30 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கலாம். கொரோனா கட்டுப்பாட்டு அறை திறக்க வேண்டும். அவசர உதவி 104, 1070, 1031 ஆகிய தொலைபேசி எண்களை கோவில் அறிவிப்பு பலகைகளில் எழுதி வைக்க முடிவு செய்யப்பட்டது.