மணக்குள விநாயகர் கோவில் ஆடியோ: பக்தர்கள் வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2020 12:06
புதுச்சேரி : கோவிலில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, மணக்குள விநாயகர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், ஊரடங்கின்போது கோவில்களில் தரிசனம் செய்வதற்கு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை (8ம் தேதி) கோவில்கள் திறக்கப்படுகிறது.கோவிலுக்குள் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதாரமான நடைமுறைகள் குறித்து, அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை அனைத்து கோவில்களின் நிர்வாகங்களுக்கும் வழங்கி உள்ளது. இந்த நடைமுறைகள் பக்தர்களுக்கு எளிதாக புரியும் வகையில் 3 நிமிடங்கள் 44 வினாடிகள் ஓடக் கூடிய ஆடியோ பதிவை, மணக்குள விநாயகர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.தவில் - நாதஸ்வர மங்கள இசையுடன் தெய்வீகமாக துவங்கும் இந்த ஆடியோவில், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களில் ஆரம்பித்து, தரிசனத்துக்கு வரும்போது கோவில்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த 15க்கும் மேற்பட்ட விஷங்களை அழகாக தொகுத்துள்ளனர். துாய தமிழிலில் சுருக்கமாகவும், அதேசமயம் தெளிவாகவும் நடைமுறைகளை விளக்கி உள்ள இந்த ஆடியோ பதிவு பக்தர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.