கொல்லம் : அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகளையொட்டி, கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் அமைத்து பக்தர் ஒருவர் விநோதமாக வழிபாடு செய்து வருகிறார்.
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கேரளாவில் எண்ணற்றவர்கள் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கு தளர்வுகளை ஒட்டி தற்போது படிப்படியாக வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பக்தர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடக்கல் என்னும் இடத்தில் அணிலன் என்ற பக்தர் கொரோனா சிலையை நிறுவி கொரோனா தேவி ஆலயம் உருவாகினார்.
இது குறித்து அணிலன் கூறுகையில், கொரோனா தொற்று நோய்க்கு எதிராக போராடும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்காக தெய்வத்தின் முன் நான் பூஜைகளை செய்வேன். கோயில்கள் மீண்டும் திறக்கப்படுவதன் பின்னணியில் உள்ள அரசியல் பிரச்சாரத்திற்கு எதிரான போராட்டம் என்பதால் தரிசனம் இருக்காது என்பது தெரியும். இது யாரையும் கேலி செய்யும் முயற்சி அல்ல. அனைத்து பூஜைகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யப்படும். இந்து புராணங்களின்படி, கடவுள் எங்கும் நிறைந்தவர், வைரஸில் கூட இருக்கிறார். ஒரு வைரஸை தேவி என்று வணங்குவது எங்களுக்கு ஒரு புதிய வழக்கம் அல்ல. தரிசனம் இல்லை என்றாலும், கொரோனா தேவியின் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும். கொரோனாவிற்கு எதிரான போரில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், விஞ்ஞானிகள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் என அனைவரும் நலமுடன் இருக்கவே சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படுகிறது. பூஜைகளுக்காக பணம் வசூலிக்கப்படமாட்டாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.