பதிவு செய்த நாள்
21
நவ
2026
04:11
இந்தோனேசியாவின் பாலி தீவில் அமைக்கப்பட்டுள்ள 50 அடி உயர விநாயகர் சிலை, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உலகளவில் கவனம் பெற்றுள்ளது. செயற்கை பிரம்புப் பொருளால் பின்னி உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்டச் சிற்பம், தனித்துவமான கைவினைக் கலைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பாலியின் கியான்யார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலை, 15.315 மீட்டர் (50 அடி 2 அங்குலம்) உயரம் கொண்டது. உலகிலேயே செயற்கை பிரம்புப் பொருளால் உருவாக்கப்பட்டு, தாங்கும் கட்டமைப்புடன் அமைக்கப்பட்ட மிக உயரமான சிற்பம் என்ற பிரிவில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்தச் சிற்பத்தை அலாஸ் ஹரூம் பாலி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்தச் சாதனை குறித்து இந்தோனேசியாவின் கின்னஸ் உலக சாதனை அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள இந்தோனேசியத் தூதரகமும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்த தகவலைப் பகிர்ந்துள்ளது.
ஞானம், வெற்றி, நற்பேறு மற்றும் புதிய தொடக்கங்களின் அடையாளமாக விநாயகர் போற்றப்படுகிறார். அந்த வகையில், இந்த பிரம்மாண்டச் சிற்பம் பாலியின் கலாசாரப் பெருமைக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.. உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தோனேசியா. இருப்பினும், அந்நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்தில் இந்து, பௌத்த மரபுகளின் தாக்கம் ஆழமாகப் பதிந்துள்ளது. குறிப்பாக, இந்தோனேசியாவின் பாலி தீவில் இந்து மதம் இன்றளவும் மக்களின் அன்றாட வாழ்விலும் வழிபாட்டு முறைகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாலி தீவில் ஏராளமான இந்துக் கோயில்கள் உள்ளன. இவை உள்ளூர் மொழியில் புரா என்று அழைக்கப்படுகின்றன. பாலியின் முக்கியமான கோயில்களில் ஒன்றான புரா பெசாகி, பாலியின் தாய்க் கோயில் என்று போற்றப்படுகிறது. கடற்கரையில் அமைந்துள்ள தனா லாட் கோயிலும் உலகப் புகழ்பெற்றது.
ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் பாலியின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, ராமாயணக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய நடன, நாடக நிகழ்ச்சிகள் அங்கு பிரபலமாக உள்ளன. சீதையை ராவணன் கடத்திச் செல்லும் நிகழ்வு, அவரை மீட்பதற்கான போர் உள்ளிட்ட காட்சிகள் புகழ்பெற்ற கெசாக் நடனத்தில் இடம்பெறுகின்றன. இத்தகைய இந்து மரபுகள் ஆழமாக வேரூன்றியுள்ள பாலி தீவில், தற்போது 50 அடி உயர விநாயகர் சிற்பமும் மற்றொரு முக்கிய அடையாளமாக உருவெடுத்துள்ளது. செயற்கை பிரம்புப் பொருளால் உருவாக்கப்பட்டு, தாங்கும் கட்டமைப்புடன் அமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான சிற்பம் என்ற பிரிவில் கின்னஸ் அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிபிடத்தக்கது.