பதிவு செய்த நாள்
14
ஜூன்
2020
01:06
தஞ்சாவூர்; தஞ்சை அருகே, கி.பி., 10ம் நுாற்றாண்டை சேர்ந்த, விஷ்ணு, சமணர்சிற்பங்களை, வரலாற்றுஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மணிமாறன், பூதலுார் வயல்வெளிகளில் ஆய்வு நடத்தினார். அப்போது, 9, 10ம் நுாற்றாண்டுகளை சேர்ந்த விஷ்ணு, சமணர், சப்தமாதர் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து ஆய்வாளர் மணிமாறன் கூறியதாவது:இங்கு, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் பட்டறைகிணறுகள் காணப்படுகின்றன.இந்த அமைப்பை பார்க்கும் போது, புதுக்கோட்டை, சிவகங்கை பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மக்கள், இங்கு வாழ்ந்து இருக்கலாம். கிணறு ஒன்றில், ஒரே கல்லில் வடிக்கப்பட்ட மிகச்சிறிய சப்தமாதர் புடைப்பு சிற்பம் காணப்படுகிறது. தற்போது, இங்கு சிற்பங்கள் பாதி மண்ணில் புதைந்து, மார்பிலிருந்து தலை வரை மட்டுமே, வெளியே தெரிகின்றன.அத்துடன் இச்சிற்பங்கள் அமைப்பானது, கி.பி., 10ம் நுாற்றாண்டு சோழர் காலத்தை சார்ந்தவை என, அறிய முடிகின்றது.
மேலும், இப்பகுதியில்சிவாலயம் ஒன்று இருந்து, சிதைந்து போயிருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. அத்துடன், 10ம் நுாற்றாண்டை சேர்ந்த விஷ்ணுவின் சிற்பமானது, இடுப்பிற்கு கீழே மண்ணில் புதையுண்ட நிலையில், இடுப்பில் இருந்து மேல்பாகம் வரை காண முடிகிறது. அழகிய புடைப்பு சிற்பமாக மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, வலது கரத்தில் அபயம் காட்டி, இடது கரத்தை இடுப்பில் ஊன்றியவாறு காணப்படுகிறது. காது, கழுத்து, கை, இடுப்பு பகுதிகளில் அணிகலன்களும் உள்ளன.இங்கு சிவாலயம், விஷ்ணு, சமணர் கோவில் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இப்பகுதியில், மிகப்பெரும் குடியிருப்பு சோழர் காலத்தில் இருந்ததற்கான சான்றாதாரங்களையும் காண முடிகிறது. மேலும், உடைந்த ஏராளமான சோழர்கால கறுப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள், அந்த வயல்வெளிப்பகுதி முழுதும் நிறைந்து காணப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.