பதிவு செய்த நாள்
18
ஜூன்
2020
12:06
நாகப்பட்டினம்; நாகையில், 1,000 ஆண்டுகளாக, மண்ணில் புதைந்திருந்த, சோழர் கால சிவலிங்கம் வெளி கொணரப்பட்டதை அடுத்து, அவ்விடத்தில் புதிய சிவாலயம் கட்டும் பணிகள் துவங்கின.
கி.பி., 10ம் நுாற்றாண்டில், சோழ தேசத்தில், ராஜேந்திர சோழன் ஆட்சி புரிந்தார். அவர் பெரும் படையுடன் கடல் கடந்து, இலங்கை, மலேஷியா, இந்தோ னேஷியா, கம்போடியா, மியான்மர் போன்ற அயல்நாடுகளை போரிட்டு வென்றார்.அப்போது, தன் கடற்படை வீரர்களை, மத்திய வங்கக் கடலோரம் தங்க வைத்திருந்ததாக, செவி வழி செய்திகள் தெரிவிக்கின்றன.
கடற்படை வீரர்கள் தங்கியிருந்த பகுதி, தற்போது, நாகை, ஒரத்துார் எனக் கூறப்படுகிறது. வீரர்கள் தங்கியிருந்த பகுதியில், சிவாலயம் ஒன்றை எழுப்பி, வழிபட்டு வந்துள்ளனர்.சோழர் ஆட்சிக்கு பின், காடுகளாக மாறிப்போன பகுதியில், சிவாலயமும் மண்ணுக்குள் புதைந்து போயுள்ளது. 1,000 ஆண்டுகளுக்கு மேலாக புதையுண்ட சிவலிங்கத்தின் மேற்பகுதி, ஆறு ஆண்டுகளுக்கு முன், வெளியில் தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்கள் முயற்சியால், சிவலிங்கம் வெளிக் கொணரப்பட்டு நித்யபூஜைகள் செய்யப்பட்டு வந்தன.இதையடுத்து, நாகை நகர, அ.தி.மு.க., செயலர் தங்க கதிரவன், அப்பகுதியில் புதிய கருங்கல் சிவாலயம் கட்ட முடிவெடுத்தார். பிப்., 5ம் தேதி, வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டன.கொரோனா காரண மாக, கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.தற்போது, ஊரடங்கு தளர்வால், கட்டுமானப் பணிகள் மீண்டும் துவங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
சிவாலய கட்டுமானப் பணியில் பங்கெடுக்க விரும்புவோர்,தங்க கதிரவனை தொடர்பு கொள்ளலாம். மொபைல்: 9842487322.