சென்னை: கோவில்களை சார்ந்து வாழும் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவருக்கும் நிதி உதவி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.‘தினமலர்’ நாளிதழின் திருச்சி – வேலுார் பதிப்புகளின் வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி தாக்கல் செய்த மனு:மூன்று மாதங்களுக்கு மேலாக கோவில்கள் மூடப்பட்டு இருப்பதால் அதை நம்பி வாழ்பவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் தரிசனத்துக்கு கோவில்கள் திறக்கப்படவில்லை என்றாலும் தினசரி நடக்கும் பூஜை சடங்குகளுக்காக அர்ச்சகர்கள் ஓதுவார்கள் உள்ளிட்டோர் பணியாற்றுகின்றனர். கோவில்களில் பணியாற்றும் பலருக்கு மாத வருமானம் கிடையாது. தினசரி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. உபரி நிதி வாயிலாக அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் பூசாரிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 10 ஆயிரத்து 448 அர்ச்சகர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. மற்ற பணியாளர்களை விட்டு விட்டனர். இவர்கள் பக்தர்கள் அளிக்கும் நன்கொடையை நம்பி உள்ளனர்.கோவில்களில் இருந்து பெறப்படும் வருவாயில் 35 சதவீதம் அறநிலையத்துறை அதிகாரிகளின் சம்பளத்துக்கும் 35 சதவீதம் கோவில்களின் பராமரிப்புக்கும் செலவிடப்படுகிறது. மீதி 30 சதவீதம் உபரி நிதியாக வைக்கப்படுகிறது. தற்போது 300 கோடி ரூபாய் உபரி நிதியாக உள்ளது. இந்த நிதியில் இருந்து அர்ச்சகர்கள் அத்யாபகர்கள் வேதபாராயணிகள் ஓதுவார்களுக்கு உதவி செய்யலாம். இவர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய்; மற்ற பணியாளர்களுக்கு 7500 ரூபாய் வழங்கும்படி அறநிலையத்துறைக்கு 2020 மே 20ல் மனு அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை. எனவே அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியtர்கள் பூசாரிகள் அத்யாபகர்கள் வேதபாராயணிகள் ஓதுவார்கள் இசைக்கலைஞர்கள் திருவிளக்கு ஏந்தி செல்பவர்கள் என அனைத்து ஊழியர்களுக்கும் நிதி உதவி வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.