பதிவு செய்த நாள்
27
ஜூன்
2020
12:06
வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு, கொரோனாவால் பக்தர்கள் வருகை குறைந்ததால், கோசாலையில் உள்ள பசுக்களுக்கு போதுமான தீவனங்கள் கிடைக்காத நிலை உள்ளது.
வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் கோசாலை அமைத்துள்ளது. இந்த கோசாலையில் 32 பசுக்கள், 6 கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 10 பசுக்கள் கறவை நிலையில் உள்ளன. நாள் ஒன்றுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளையும் 20 லிட்டருக்கு மேல் பால் கறந்து, கோவில் பூஜைக்கு போக மீதமுள்ள பால், கூட்டுறவு பால் சொசைட்டிக்கு வழங்கப்படுகிறது.இதில் கிடைக்கும் வருவாயை கொண்டு கோசாலை பசுக்களுக்கு தீவனங்களும், இரு ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகின்றனர். மேலும் ஐந்து பேர்களுக்கு மேல், சமூக சேவையாக கோசாலையில் உள்ள பசுக்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பரவலுக்கு முன், கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோசாலையில் உள்ள பசுக்களுக்கு அகத்தி கீரை, பசுந்தீவன புல் மற்றும் வைக்கோல் போன்றவற்றை ஒவ்வொரு நாளும் தானமாக கொடுத்து வந்தனர்.தற்போது கொரோனா பரவலால் கடந்த சில மாதங்களாக கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது பக்தர்கள் வருகை மிக குறைவாக உள்ளது. இதனால் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு போதிய தீவனங்கள் கிடைக்காமல் போனது. எனவே, பசுந்தீவன புல், வைக்கோல் மற்றும் தீவனங்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்கினால், கோசாலையில் உள்ள பசுக்கள் பசியாறும்.