பதிவு செய்த நாள்
30
ஜூன்
2020
01:06
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், தன்வந்திரி பெருமாளுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் ஆனித் திருமஞ்சனம் நடந்தது.
வைணவ தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவில் உப சன்னதியில், நோய் தீர்க்கும் தன்வந்திரி பெருமாள் எழுந்தருளியுள்ளார். ஆண்டுதோறும் ஆனி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில், தன்வந்திரி பெருமாளுக்கு ஆனித் திருமஞ்சனம் நடத்தப்படும். அதன்படி, நேற்று முன்தினம் காலை, 9 மணி முதல், 11:30 மணி வரை, ஸ்நபன ஹோமம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம்: ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில், நேற்று சக்கரத்தாழ்வாருக்கு ஆனித் திருமஞ்சனம் நடைபெற்றது. கொள்ளிடம் ஆற்றில் எடுக்கப்பட்ட புனித நீர், கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, காலை, 8 மணி முதல், 12:30 மணி வரை சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அரசு விதிமுறைப்படி, அர்ச்சகர் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான கைங்கர்யர்களை கொண்டு, இரண்டு நாட்களும் உலக நன்மைக்காகவும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் நலம் பெற வேண்டியும் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது.