பதிவு செய்த நாள்
02
ஜூலை
2020
10:07
திருப்பதி; திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில், வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் துவங்கியது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான, கோவிந்தராஜ சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, மூன்று நாட்கள் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். ஜேஷ்டாபிஷேகத்தின் போது, உற்சவமூர்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டுள்ள தங்க கவசம் களையப்பட்டு, சிலைகளின் தன்மை, கவசத்தின் நிலை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும்.
சேதங்களை சரி செய்து, மீண்டும் உற்சவமூர்த்திகளுக்கு அணிவிப்பர்.நேற்று ஜேஷ்டாபிஷேகம் துவங்கியது. முதல் நாளான நேற்று காலை, உற்சவ மூர்த்திகளுக்கு கவசவாசம் செய்து, 108 கலச நீர் உள்ளிட்ட திருமஞ்சனம் நடந்தது.மாலையில், உற்சவ மூர்த்திகள் விமான பிரகாரத்தில் வீதியுலா வந்தனர். ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர். தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், தேவஸ்தான ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு, ஏழு நாட்கள் பணிமுறை சுழற்சியை தேவஸ்தானம் அமல்படுத்தி உள்ளது. அதன்படி, ஒருவாரம் முழுவதும் ஊழியர்கள், திருமலையில் தங்கியிருந்து பணிபுரிய வேண்டும்.