பதிவு செய்த நாள்
02
ஜூலை
2020
11:07
சென்னை; தமிழகத்தில், ஊரக பகுதிகளில், நேற்று சிறிய வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சியுடன் இறைவனை வழிபட்டனர்.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, மார்ச், 25ம் தேதி ஊரடங்கு துவங்கியது.
அப்போது, வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. ஒவ்வொரு முறையும், சில தளர்வுகளுடன், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஜூலை, 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம், ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது, சில மாநிலங்களில், வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. ஆனால், தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. ஊரடங்கு காரணமாக, வீட்டில் முடங்கியுள்ள மக்கள், வழிபாட்டு தலங்களுக்கு சென்றால், அவர்களுக்கு மன அழுத்தம் குறையும். எனவே, வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என, மத அமைப்புகள் வலியுறுத்தின.எனினும், வழிபாட்டு தலங்களை திறந்து, மக்கள் அதிக அளவில் கூடினால், நோய் பரவும் வாய்ப்பு உள்ளது என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர்.
அதை ஏற்று, வழிபாட்டு தலங்களை அரசு திறக்கவில்லை.இந்நிலையில், சென்னை போலீஸ் எல்லை பகுதி தவிர்த்து, மாநிலத்தின் பிற பகுதிகளில், கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோவில்கள், அதாவது, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக, ஆண்டு வருமானம் உள்ள கோவில்கள், சிறிய மசூதிகள். தர்காக்கள், தேவாலயங்கள் ஆகியவற்றில் மட்டும், ஜூலை, 1 முதல் தரிசனம் அனுமதிக்கப்படும் என, முதல்வர் அறிவித்தார்.முதல்வர் அறிவித்தபடி, நேற்று கிராமங்களில் உள்ள, சிறிய வழிபாட்டு தலங்கள், மூன்று மாத இடைவெளிக்கு பின் திறக்கப்பட்டன. மக்கள் மகிழ்ச்சியுடன், வழிபாட்டு தலங்களுக்கு சென்று, இறைவனை வழிபட்டனர்.