பதிவு செய்த நாள்
02
ஜூலை
2020
11:07
திருப்பூர் : கிராமப்புற கோவில்களில், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கினாலும், சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு, 31 ம் தேதி வரை, ஊரடங்கை நீட்டித்துள்ளது. கிராமப்புறமாக இருந்தாலும், மக்கள் கூட்டம் அதிகம் வரும் கோவில்களில், பக்தர் தரிசனத்துக்கு அனுமதியில்லை. முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, கிராமப்புற கோவில்களில் நேற்று பக்தர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.கொரோனா ஊரடங்கு தொடர்வதால், மக்கள் கூட்டம் சேர விரும்புவதில்லை. கிராமப்புற கோவில்களிலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளையும், சமூக இடைவெளியையும் பின்பற்றி, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். நோயாளிகள், முதியோர், குழந்தைகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமெனவும், அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில்,கோவிலுக்கு வருவோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இல்லாவிடில், கோவிலுக்குள் அனுமதி கிடையாது. நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கும் அனுமதியில்லை. அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். விபூதி, குங்குமம் உட்பட பிரசாதம், பாக்கெட்டுகளாக வழங்க வேண்டும். கோவில் வளாகங்களை, தினமும் பலமுறை சுத்தம் செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது, என்றனர்.