மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே புதர்களுக்கு மத்தியில் புதைந்து கிடந்த கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
மடத்துக்குளம் அருகே கண்ணாடிப்புத்தூர் பகுதியில், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் மற்றும் ஜிவிஜி கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் கற்பகவல்லி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு புதர்களுக்கு மத்தியில் ஒரு கற்சிலை புதைந்து கிடந்தது. இதை எடுத்து அருகில் இருந்த பீடத்தில் வைத்தனர்.இது குறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறுகையில், இந்த சிலை பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட அய்யனார் சிலை ஆகும். நீர் நிலை மற்றும் வயல் வெளி பகுதியில் இச்சிலையை அமைத்து வழிபடுவது பழமையான வழக்கம். ஒரு காலை மடித்து அமர்ந்த நிலையில் உள்ளது.கை, கால், கழுத்து பகுதியில் ஆபரணங்கள் உள்ளது. இந்த பகுதியில் பழமையான கோவில் இருந்திருக்கலாம். இதற்கு சிறிது தொலைவில் கல்வெட்டுகள் உள்ள துாண், பாறையில் செதுக்கப்பட்ட அடையாளங்கள் உள்ளன என்றனர்.