பதிவு செய்த நாள்
17
ஜூலை
2020
07:07
அந்தியூர், அந்தியூர் குருநாதசுவாமி கோவில் ஆடித்தேர்த்திருவிழா, கால்நடை சந்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த புதுப்பாளையத்தில், பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோவில் உள்ளது. கோவிலில் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். ஆடி மாத முதல் புதன்கிழமையில் பூச்சாட்டு விழா, இரண்டாவது புதன்கிழமை கொடியேற்றம், மூன்றாவது புதன்கிழமை முதல் பூஜை நடக்கும். இதையடுத்து பிரசித்தி பெற்ற கால்நடைச்சந்தை மற்றும் தேர்த்திருவிழா, தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும். கால்நடை சந்தைக்கு, இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து குதிரை, பசு, எருதுகள் உள்ளிட்ட விலங்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். திருவிழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நடப்பாண்டு கொரோனா ஊரடங்கால், பூச்சாட்டுதல் உட்பட அனைத்து திருவிழா நிகழ்ச்சிகளும், ரத்து செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.