திருப்பதி: திருமலை திருப்பதியில் தற்போது உள்ள நடைமுறைப்படி பெருமாளை தரிசிக்க பக்தர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் சேர்மன் சுப்பாரரெட்டி தெரிவித்துள்ளார். திருமலை கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்ககர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து பக்தர்களுக்கு தடை வருமா? என்று கேட்ட போது, ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு கொரோனா வந்துள்ளது உண்மைதான், ஆனால் அவர்களுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுற்றுச்சூழலால் வந்துள்ளதே தவிர பக்தர்களால் தொற்று ஏற்படவில்லை. பாதிப்பு ஏற்பட்ட ஊழியர்களுக்கு சரியான சிகிச்சை வழங்கப்பட்டதை அடுத்து அவர்களில் பலர் குணமடைந்து மீண்டும் பணிக்கு வந்துவிட்டனர். மூத்த அர்ச்சகர்கள் யாரையும் பணிக்கு வரும்படி கட்டாயப்படுத்துவது கிடையாது. அவர்கள் விருப்பம் இருந்தால் வரலாம் என்றுதான் சொல்லியிருக்கிறோம். அரசு அறிவிப்பின்படி மலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர் இதுவரை ஒரு பக்தர் கூட கொரோனா அறிகுறியுடன் தடுத்து நிறுத்தப்படவில்லை.ஆகவே இப்போதுள்ள நடைமுறைப்படி திருமலைக் கோயிலில் பக்தர்களுக்கான தரிசனம் தொடரும் என்றார்.