ஒரு நாள் ஸெய்யதுனா ஈஸா வெட்ட வெளியில் சொல்லும் போது மழை வந்தது. ஒதுங்க இடம் தேடிய போது ஒரு குடில் இருப்பதைக் கண்டார். அங்கு ஒரு பெண் இருந்தாள். அதில் நுழையாமல் வேறிடம் தேடிச் சென்றார். குகை ஒன்று தென்பட்டது. அதற்குள் எட்டிப் பார்த்த போது சிங்கம் கர்ஜித்தபடி நின்றிருந்தது. அப்போது ஸெய்யதுனா, ‘‘இறைவா! உன் படைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்தில் ஒதுங்கி கொண்டு உள்ளன. அவற்றிற்கு நீயே இடங்களை ஒதுக்கி கொடுத்து உள்ளாய். எனினும் எனக்குத்தான் ஒதுங்க இடமே இல்லை’’ என்றார். . ‘‘ ஒதுங்குவதற்கு உமக்கா இடமில்லை? என்னுடைய ஆழமான அன்பு என்றென்றும் உண்டு. என் அன்பு நிழலில்தான் நீர் எப்போதும் ஒதுங்கி நிற்க வேண்டும். இம்மை உமக்கு வேண்டாம். இம்மையின் ஆயுளை விட மறுமையின் ஆயுள் மிக பெரியது. இம்மையில் மனிதனின் முழு ஆயுளை மறுமையில் ஒரு நாளுக்கு ஒப்பிடலாம்’’ என இறைவன் பதில் அளித்தான். அப்போது அவரது கண்முன் அழகிய மாளிகை காட்சியளித்தது. அப்போது மீண்டும் ‘‘ இந்த மாளிகை வேண்டுமானாலும் உமக்கு கிடைக்கும். ஆனால் உமக்கு அளித்துள்ள நபித்துவமானது இதைவிட பன்மடங்கு மாண்புடையது’’ எனத் தெரிவித்தான்.