பதிவு செய்த நாள்
18
ஜூலை
2020
12:07
திருப்பூர்: ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று, திருப்பூர், அவிநாசி, பல்லடம் சுற்றுப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. ஒவ்வொரு ஆண்டும், ஆடிவெள்ளி, ஆடி அமாவாசை நாட்களில், அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு களைகட்டும்.
இந்தாண்டு, ஐந்து ஆடி வெள்ளிக்கிழமை வருவது, சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கொரோனா ஊரடங்கால், கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளது. தரிசனம் செய்ய, அனுமதி இல்லை. இருப்பினும், ஆடி மாதம் சிறப்பு வாய்ந்தது என்பதால், கிராமப்புற கோவில்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. கொரோனாவில் இருந்து காக்க வேண்டி, அம்மனுக்கு, பால் மற்றும் மஞ்சள் நீர் அபிஷேகம் செய்யப்பட்டது.ஊரடங்கு அமலில் இருப்பதால், அதிகாலையிலேயே, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. கிராமங்களில், பக்தர்கள், சமூக இடைவெளியுடன் வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில், தீபம் ஏற்றியும், அம்மனுக்கு, எலுமிச்சை மாலை அணிவித்தும் வழிபட்டனர்.மங்கலம், பல்லடத்தம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், பட்டத்தரசி அம்மன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், போலீஸ் லைன் மாரியம்மன், டவுன் மாரியம்மன், நஞ்சப்பா நகர் சவுடேஸ்வரி அம்மன், ஜீவா நகர் மாகாளியம்மன் கோவில் உட்பட, அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.