பதிவு செய்த நாள்
18
ஜூலை
2020
05:07
தஞ்சாவூர் : கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சார்பில், தங்கத் தட்டில் வைத்து முக கவசம் வழங்கி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தஞ்சாவூர், பாபநாசத்தில் உள்ள, 108 சிவாலயம் அருகில், கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தார் சார்பில், நேற்று கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில், முக கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, தங்கத் தட்டில், முக கவசங்களை வைத்து, பொதுமக்களுக்கு வழங்கினர்.இது குறித்து, திருவடிக்குடில் சுவாமிகள் கூறியதாவது: முக கவசத்தைத் தங்கத் தட்டில் வைத்து கொடுக்கும்போது, அது மக்களிடம் கூடுதல் கவனத்தை பெறுகிறது. அதனால் தான் தங்கத் தட்டில் வைத்து கொடுத்தோம். விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் மற்றும் சேவை அமைப்புகளுக்கு உரிய அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும். அது கொரோனாவை கட்டுப்படுத்த, அரசுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.