பதிவு செய்த நாள்
18
ஜூலை
2020
05:07
நீங்கள் கூறும் நபர்கள், பிறப்பால் ஹிந்துக்களாக இருந்தாலும், அவர்கள் சொல்லை மீறி, அவர்களின் வீட்டில் உள்ளவர்கள், கோவில், குளங்களை சுற்றி வந்தாலும், அரசியல் காரணங்களுக்காக இவர்கள், ஹிந்துக்களுக்கு எதிராகத் தான் குரல் கொடுப்பர்; அது தான், அரசியல் என, தவறாக கருதி வருகின்றனர்... என, நெத்தியடியாக கூறத் துாண்டும் வகையில், பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா அறிக்கை: கந்த சஷ்டி கவசத்தை இழிவாக ஒரு கும்பல் பேசியதை, திரையுலக நட்சத்திரங்கள் சிலர் கண்டித்துள்ளனர். ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, காங்., தலைவர் அழகிரி, காங்., முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் போன்றோர் ஏன் கண்டிக்கவில்லை? வேறு மதத்தினரை, வேறு யாராவது இப்படி கண்டித்திருந்தால் கூட, இவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்!
பிற நாட்டினர் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை... உங்களுக்கு மட்டுமின்றி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அதிக பாசம் வந்தது எதனாலோ என கேட்கத் தோன்றும் வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் அறிக்கை: தமிழகத்திற்கு வந்துள்ள, பல நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் சுற்றுலா பயணியரை, தமிழக அரசு கைது செய்து, புழல் சிறையில் அடைத்திருந்தது. எங்கள் கோரிக்கையை ஏற்று அவர்களை, சென்னை சூளையில் உள்ள, ஹஜ் சொசைட்டி நிலையத்தில் தங்குவதற்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கு நன்றி.
ஆளும், அ.தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகளையும், அதன் தலைவர்களையும், தி.மு.க., ஐ.டி., விங் அட்மின்கள், தொடர்ந்து அவதுாறான கருத்துகளை பரப்பி வருகின்றனரே; அதையும் கொஞ்சம் கவனியுங்கள்... என கூறத் துாண்டும் வகையில், தி.மு.க., முதன்மை செயலர் நேரு அறிக்கை: தி.மு.க.,வை தேர்தலில் எதிர்த்து வெற்றி கொள்ள முடியாத சில தீய சக்திகள், சமூக வலைதளங்களில், திட்டமிட்டு, தி.மு.க.,வுக்கு எதிராக அவதுாறு பரப்பி வருகின்றனர். மக்கள் செல்வாக்கு எங்கள் கட்சிக்கு இன்னமும் இருக்கிறதே என்ற பொறாமை தான், இதற்கு காரணம்.
கொரோனா ஒழிப்பில், கம்யூனிஸ்டுகள் என்ன செய்து விட்டனர்... அவர்களை, இந்த மூத்த தலைவர் பாராட்டுகிறாரே... என வியப்பு தெரிவிக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர், என்.சங்கரய்யா அறிக்கை: தமிழகத்தில் கொரோனா பேரிடருக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஊழியர்கள், சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அந்தந்த பகுதியின் துன்பங்களை போக்க, கம்யூ.,க்கள் பணியாற்ற வேண்டும். கொரோனா நோய் தொற்றை எதிர்கொள்ள, அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.