பதிவு செய்த நாள்
23
ஜூலை
2020
11:07
சேலம்: பக்தர்கள் இல்லாமல், ஆடி பண்டிகையில், அபிஷேகம், பூஜை நடத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சேலத்தில், கோட்டை மாரியம்மன் உள்பட அனைத்து மாரியம்மன் கோவில்களின் ஆடிப்பண்டிகை ரத்து செய்யப்படுவதாக, கடந்த வாரம், கோவில் நிர்வாகங்கள் அறிவித்தன. இந்நிலையில், பண்டிகையை நடத்த, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம், அனைத்து கோவில் செயல் அலுவலர், தக்கார்களிடம் ஆலோசித்தனர்.
இதுகுறித்து, சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் நிர்வாக அலுவலர் ராஜாராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அதே நேரம், பண்டிகையின்போது அம்மனுக்கு நடத்தப்படும் அபிஷேகம், பூஜை, கோவில் வழக்கப்படி நடத்தப்படும். தினமும் காலை, 11:00 முதல், மாலை, 4:00 மணி வரை, விழாக்கால அபிஷேகம், சிறப்பு அலங்காரம் பூஜை நடக்கும். அதே நேரம், கோட்டை மாரியம்மனுக்கு நேர்ந்து கொண்ட பக்தர்கள், அவரவர் வீடு, இருப்பிடங்களில் இருந்தபடி அம்மனை பிரார்த்திப்பதோடு, நிர்வாக நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதே நடைமுறையில், குகை காளியம்மன், மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி, சஞ்சீவிராயன்பேட்டை, அம்மாபேட்டை பலபட்டரை மாரியம்மன் உள்பட அனைத்து கோவில்களில், அதன் நிர்வாகம், அபி?ஷகம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.