பதிவு செய்த நாள்
23
ஜூலை
2020
12:07
அயோத்தி : அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா, அடுத்த மாதம், 5ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விழாவில் பங்கேற்க, அனைத்து மாநிலமுதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என, கோவிலை கட்டும், ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ராஅறக்கட்டளை தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர், 9ல் அனுமதியளித்து உத்தரவிட்டது.
பங்கேற்பு: மேலும், கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை ஒன்றை அமைக்கவும், மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில், ஒரு அறக்கட்டளையை, பிரதமர் மோடி, கடந்த பிப்ரவரியில் அமைத்தார். 15 உறுப்பினர்கள் அடங்கிய இந்த அறக்கட்டளை, கோவில் கட்டுமான பணிகளை நிர்வகிக்கும் என,தெரிவிக்கப்பட்டது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த தற்காலிக ராமர் கோவில், வேறு இடத்துக்கு மாற்றும் பணி, மார்ச், 25ல் நடந்தது. இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இதன்பின், கொரோனா பரவல் காரணமாக, பணிகள் தாமதமாயின. இந்நிலையில், அயோத்தியில், கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவது பற்றி ஆலோசிக்க, கடந்த, 18ம் தேதி, அயோத்தியில், அறக்கட்டளை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, ஆக., 3அல்லது 5ம் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், விழாவில் பங்கேற்க பிரதமரை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதன்பின், ஆக., 5ம் தேதி, அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினால், அதில் பிரதமர் பங்கேற்பார் என, அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, ஆக., 5ம் தேதி காலை, பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை நடத்த, அறக்கட்டளை முடிவு செய்தது. இதுபற்றி, அறக்கட்டளையின் பொருளாளர், சுவாமி கோவிந்த் தேவ் கிரி கூறியதாவது:அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க, அயோத்தி போராட்டத்தில் தொடர்புடைய தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். விழாவில் பங்கேற்க, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, விழாவில், அழைப்பாளர்கள் உட்பட, 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். அவர்கள் அனைவரும், சமூக விலகலை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து பங்கேற்பர். முன்னாள் துணை பிரதமர் அத்வானி, பா.ஜ., மூத்த தலைவர்கள், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, பஜ்ரங்கள் தலைவர், வினய் கத்யார், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத் ஆகியோர், அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பர் என, எதிர்பார்க்கிறோம்.
வெள்ளி செங்கல்கள்: விழாவில், ஐந்து வெள்ளி செங்கல்கள், கருவறை அமைய உள்ள இடத்தில் வைத்து பூஜிக்கப்படும். ஐந்து கிரகங்களை குறிக்கும் வகையில், ஐந்து வெள்ளி செங்கல்கள் வைக்கப்பட உள்ளன. விழாவையொட்டி, ஆக., 3ம் தேதி முதல், வைதீக சடங்குகள், விநாயகர் பூஜையுடன் துவங்குகின்றன. 4ம் தேதி, ராமாச்சார்ய பூஜைகள் நடக்கின்றன. 5ம் தேதி காலை, 8:00 மணிக்கு பூமி பூஜைகள் துவங்கும். இதற்காக, காசியிலிருந்து, 11 வேத விற்பன்னர்கள் வரவழைக்கப்பட உள்ளனர். அடிக்கல் நாட்டு விழாவன்று, காலை, 8:00 மணிக்கு, பூமி பூஜைக்கான நிகழ்ச்சிகள் துவங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்: ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி, 5ம் தேதி காலை, 11:00 மணிக்கு, அயோத்தி வருகிறார். அவரை, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்கிறார். பின், பிரதமர், அயோத்தியில் உள்ள தற்காலிக ராமர் கோவில், ஹனுமன் கோவில் ஆகியவற்றுக்கு, யோகி ஆதித்யநாத்துடன் சென்று, சிறப்பு வழிபாடு செய்கிறார். பின், 12:15 மணிக்கு கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை, உ.பி., முதல்வர்முன்னிலையில், பிரதமர் நாட்டுகிறார். மதியம், 1:10 மணிக்கு அயோத்தியிலிருந்து, பிரதமர் புறப்படுகிறார். மோடி, பிரதமராக பதவியேற்ற பின், அயோத்திக்கு முதல்முறையாக செல்ல உள்ளார். இத்தகவலை, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
உத்தவ் பங்கேற்கிறார்: அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில், மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நிச்சயம் பங்கேற்பார் என, சிவசேனா தெரிவித்துள்ளது. இதற்கு தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில், உத்தவ் தாக்கரே பங்கேற்க கூடாது. முதல்வர் பதவி வகிக்கும் ஒருவர், இந்த விழாவில் பங்கேற்பது, மதச்சார்பின்மைக்கு விரோதமாகும் என்றார்.எனினும், அக்கட்சி தலைவர், சரத் பவார், உத்தவ் தாக்கரே பங்கேற்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக, ராமர் கோவில் கட்டுவதால், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தீர்ந்துவிட போவதில்லை என்றார். மஹாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர், பாலாசாகேப் தோரத் கூறுகையில், கொரோனாவை எதிர்கொள்வதில் ஏற்பட்ட தோல்விகளை மறைக்க, ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை, மத்திய அரசு பயன்படுத்துகிறது என்றார்.