பதிவு செய்த நாள்
23
ஜூலை
2020
02:07
சென்னை : திருப்பரங்குன்றம் கோவில் யானையை, திரும்ப பெற்றுக் கொள்ள, அசாம் மாநில வனத்துறை விருப்பம் தெரிவித்து உள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கோவிலில், தெய்வானை என்ற யானை, மூன்று ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. பாகனை தாக்கியதால், திருச்சி எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டது.அங்கும், யானை தெய்வானை, ஒரு பாகனை தாக்கியதால், என்ன செய்வது என, வனத்துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், அசாம் வனத்துறை அதிகாரிகள், இந்த யானையை திரும்பப் பெற, விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உரிய ஆவணங்களுடன், தமிழக தலைமை வன உயிரின காப்பாளர் கடிதம் எழுதினால், யானையை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும். இதற்கு, நாங்கள் தயாராக இருக்கிறோம் என, அசாம் மாநில வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, சென்னையை சேர்ந்த, யானைகள் பாதுகாப்பு ஆர்வலர், தீபக் நம்பியார் கூறியதாவது:கடந்த, 2008ல், அசாமில் பிறந்த இந்த யானை, மூன்று ஆண்டு குத்தகை அடிப்படையில், தனியாரால் தமிழகத்துக்கு, 2014ல் கொண்டு வரப்பட்டது. இதற்கான குத்தகை, 2017ல் காலாவதியாகி விட்டதால், உரிய பதிவு ஆவணங்களை திரட்டுவதில், தமிழக வனத்துறைக்கு சிக்கல் ஏற்படும். அசாம் வனத்துறைக்கு, தமிழக வனத்துறை அதிகாரிகள், என்ன பதில் தெரிவிக்க போகின்றனர் என, தெரியவில்லை. இதில் எடுக்கப்படும் முடிவு, சட்டவிரோத யானைகள் இடமாற்றத்துக்கு, முடிவு கட்டும் வகையில் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.