பதிவு செய்த நாள்
24
ஜூலை
2020
07:07
சென்னை : ஆடிப்பூரத்தை முன்னிட்டு, சென்னை புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாடு மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில், பெண்கள், பொங்கலிடுதல், புற்றுக்கு பால் வார்த்தல், மாவிலக்கு போடுதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட, நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது வழக்கம். ஊரடங்கு காரணமாக, அம்மன் கோவில்கள், பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆனால், கோவில்களில், ஆடி சிறப்பு பூஜை விமரிசையாக நடத்தப்படுகிறது.
ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும் அன்று, பெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவது போல, அம்மனுக்கு, வளைகாப்பு நடத்தி, வழிபாடு நடத்தப்படுகிறது.அம்பிகைக்கு, வளையல்களால் அலங்காரம் செய்து வழிபட்டு, அந்த வளையல்கள், பெண்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுவதும் வழக்கம்.அன்று, திருமணமான பெண்கள், மஞ்சள் கயிறு தாலி கட்டிக்கொள்ள, தீர்க்க சுமங்கலியாய் இருப்பர் என்பதும் ஐதீகம்.ஆடிப்பூரத்தை முன்னிட்டு, திருமுல்லைவாயில், பச்சையம்மன் கோவிலில், மூலவருக்கு இன்று சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து, வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று முதல், நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டன. ஆடிப்பூரமான இன்று, மூலவருக்கு, 1,008 கலசாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஆடிப்பூர நிகழ்ச்சி, இன்று காலை, 6:00 மணி முதல், https://www.youtube.com/channel/ UC0GY_ 41d5Kpl8o1rzI66e9A என்ற யுடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சென்னை, திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலில், ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சியை, https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற, யுடியூப் சேனல் மூலம், மாலை, 4:30 மணிக்கு, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இதேபோல, மயிலாப்பூர், முண்டகக்கண்ணிஅம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், பிராட்வே காளிகாம்பாள், மயிலாப்பூர் கோலவிழியம்மன், மடிப்பாக்கம் பொன்னியம்மன் உள்ளிட்ட கோவில்களில், ஆடிப்பூர விழாவிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, இன்று காலை, 7:30 மணி முதல், 8:30 மணி வரை, கற்பகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், வளைகாப்பு நிகழ்ச்சியும், மாலை, 5:30 மணிக்கு, சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது.இந்நிகழ்ச்சி, http://www.youtube.com/c/MYLAPOREKAPALEES WARARTEMPLE என்ற, யுடியூப் சேனல் மூலம், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. - நமது நிருபர்-