பதிவு செய்த நாள்
24
ஜூலை
2020
06:07
மாரியம்மன் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகத்திற்கு வருவது, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தான். தமிழகத்தில் அதிக வருமானம் உள்ள அம்மன் கோவில் இதுவே. பக்தர்கள் கூட்டத்திற்கு, எப்போதும் குறைவில்லை என்றாலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் கட்டுக்கடங்காது.மிகப்பெரிய உருவம் கொண்ட, அழகான இந்த மாரியம்மன், மூலிகைகளால் ஆனவர். கோவில் தல விருட்சம், வேப்ப மரம். 1,000 ஆண்டுகளுக்கு மேல், பழமையான இத்தலத்தின் புராணப் பெயர், கண்ணபுரம். இத்தலத்து மாரியம்மன், சாமுண்டீஸ்வரி சாயலில் இருப்பதால், கர்நாடக பக்தர்கள், இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் என்பது சிறப்பம்சம்.
ஸ்ரீராமன் தகப்பனார் தசரத சக்ரவர்த்தி இத்தலத்தில் அம்மனை வழிபட்டதாக ஒரு தகவல் உண்டு.பங்குனி கடைசி ஞாயிறு அல்லது சித்திரை முதல் ஞாயிறு அன்று, ஆண்டுக்கு ஒரு முறை சமயபுரம் மாரியம்மன், கண்ணனூரில் உள்ள தன் தாய், ஆதி மாரியம்மனைக் காண வருகிறாள். அப்போது, ஊர்மக்கள் சமயபுரத்தாளுக்கு சீர் கொடுக்கின்றனர். தாய்வீட்டு சீதனமாக, இதைக் கருதுகின்றனர்.வேண்டுதல்இத்தலத்து அம்மனிடம், என்ன வேண்டுதல் என்றாலும், அதை நிறைவேற்றி கொடுப்பதாக கூறுகின்றனர். சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற முதுமொழிக்கு ஏற்றபடி, பக்தர்களின் வேண்டுதல்களை, எங்கிருந்து வேண்டிக் கொண்டாலும் நிறைவேற்றி கொடுக்கிறாள். தாலி வரம் வேண்டி தாலி தங்கம் இங்கு மிக அதிக அளவில் உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது. இத்தலத்தில் வேண்டிக் கொண்டால், சர்ஜரி இல்லாமல் பல நோய்கள் குணமாகும் அதிசயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது, மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாட்கள் தங்கி, அங்கு கோவில் ஊழியம் செய்து, நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம். நேர்த்தி கடன்உடல் உறுப்புகள் குறைபாடுள்ளவர்கள், கண்பார்வை குறையுள்ளவர்கள் இத்தலத்தில் வணங்கி, குணமாகின்றனர், வியாபார விருத்தி, விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும், இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.
பக்தர்கள், தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன், நேர்த்திக்கடனாக, மொட்டை அடித்தல், அர்ச்சனை, அபிஷேகம், காது குத்தல், தங்கரதம் இழுத்தல், அலகு குத்தல், தீச்சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், கரும்பு தொட்டில் பிரார்த்தனை, காணிக்கை, மாவிளக்கு எடுத்தல், நெல் காணிக்கை, ஆடு, மாடு, கோழி, தானியங்கள் செலுத்துதல் இவை தவிர, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, அன்னதானம் செய்கின்றனர். இக்கோவிலில் விநாயகர், முருகன், நாககன்னி சன்னதியும் உள்ளன. நாககன்னி சன்னதி முன் உள்ள வேப்ப மரத்தில், குழந்தை இல்லாத பெண்கள், தாங்கள் கட்டி வரும் சேலையின் முந்தானையை கிழித்து, மரத்தில் கட்டி, ஒரு கல்லை வைத்து விடுகின்றனர்; இதனால், குழந்தைபேறு ஏற்படும் என்பது நம்பிக்கை. குழந்தை பிறந்ததும், இங்கு வந்து தொட்டிலை அவிழ்த்து, அம்பாளுக்கு பூஜை செய்து திரும்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று, சித்திரைத் தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிக்கிறார்; அன்றைய தினம் மட்டும், ஏழு லட்சம் பக்தர்கள் திரள்வர். ஒவ்வொரு ஆண்டும், மாசி கடைசி ஞாயிறு அன்று, உலக நன்மைக்காக, பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள் மாரியம்மன். இந்த விரத நாட்கள் மொத்தம், 28.பூச்சொரிதல்இந்த காலங்களில், அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. இந்த விரத நாட்களில் துள்ளு மாவு, திராட்சை, ஆரஞ்சு, இளநீர் மற்றும் பானகம் போன்றவையே, அம்மனுக்கு நிவேதிக்கப்படுகிறது. இந்த விரதம் இனிதே நிறைவேற, மூலஸ்தான அம்மனுக்கு, பூக்களால் அபிஷேகம் செய்வதே, பூச்சொரிதல் என்று அழைக்கப்படுகிறது.
முகவரி: அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம், திருச்சி.
போன்: 0431 -207 0460. திருச்சியிலிருந்து சென்னை
செல்லும் வழியில், 15 கி.மீ. துாரத்தில் இக்கோவில் உள்ளது.