பதிவு செய்த நாள்
29
ஜூலை
2020
11:07
அயோத்தி : ராமர் கோவில் பூமி பூஜை தொடர்பாக, விவாதம், நிகழ்ச்சிகளை அயோத்தியிலிருந்து ஒளிபரப்பினால், அதில், வழக்கு தொடர்பான சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றி பேசக் கூடாது என, டிவி சேனல்களுக்கு, அயோத்தி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும், மசூதி கட்டுவதற்கு வேறு ஒரு இடத்தை, உ.பி., மாநில அரசு ஒதுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, வரும், 5ல், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை எனப்படும் அடிக்கல் நாட்டு விழா, கோலாகலமாக நடக்கஉள்ளது. இந்நிலையில், அயோத்தி மாவட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சி தொடர்பாக, டிவி சேனல்கள், அயோத்தியிலிருந்து விவாத நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால், அதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.
அந்த விவாதங்களில், அயோத்தி வழக்கு தொடர்பான சர்ச்சைக்குரிய விஷயங்களை விவாதிக்கக் கூடாது. பூமி பூஜையின் போது, அயோத்தியிலிருந்து முக்கியமான நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்தால், அதற்கு முறையான முன் அனுமதி பெற வேண்டும். டிவி சேனல் ஊழியர்கள், கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. ராமர் கோவில் அறக்கட்டளை செயலர் சம்பத் ராய் கூறியதாவது:பூமி பூஜையின் போது, ராமர் விக்ரஹத்துக்கு, நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட உடை அணிவிக்கப்படும். ராமர் விக்ரஹத்துக்கு பகவத் பாரி என்ற டெய்லர் தான், இந்த உடையை தயாரிக்கிறார். இவரது குடும்பத்தினர் தான், பாரம்பரியமாக ராமர் விக்ரஹத்துக்கு உடை தயாரிக்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
வாக்குமூலம் பதிவு நிறைவு: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு, லக்னோவில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. இதில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடைமுறை, நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய விசாரணையின் போது, சிவசேனா, எம்.பி., சதீஷ் பிராதன், தன் வாக்குமூலத்தை பதிவு செய்தார். இந்த வழக்கில், தன் பெயர் தவறாக சேர்க்கப்பட்டுஉள்ளதாக அவர் தெரிவித்தார்.
டைம் கேப்சூல் புதைப்பா? அறக்கட்டளை மறுப்பு!: ராமர் கோவிலுக்கான பூமி பூஜையின் போது, ராமரின் பிறப்பு, சிறப்பு, அயோத்தியின் முக்கியத்துவம் உள்ளிட்ட தகவல்களை தாமிர தகட்டில் எழுதி, அதை, டைம் கேப்சூல் எனப்படும் குடுவைக்குள் வைத்து, 2,000 அடி ஆழத்தில் புதைக்கவுள்ளதாக, பரபரப்பு தகவல்கள் வெளியாகின. எதிர்கால சந்ததியினர் ராமர் கோவில் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ளும் விதமாகவும், எதிர்காலத்தில் இது குறித்து சர்ச்சை எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், ராமர் கோவில் பற்றிய புகைப்படங்கள், ஆவணங்களும், இந்த கேப்சூலுக்குள் வைத்து, புதைக்கப்பட்டு, பாதுகாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய், இதை மறுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: பூமி பூஜையின் போது, டைம் கேப்சூல் புதைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல், ஒரு சிலரின் கற்பனை. டைம் கேப்சூல் விவகாரம் குறித்து, அறக்கட்டளை நிர்வாகிகள் ஒருபோதும் விவாதித்தது இல்லை. அது போன்ற திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.