பதிவு செய்த நாள்
30
ஜூலை
2020
01:07
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே வனவிலங்குகளின் உள்ளுறுப்புகளைக் கொண்ட 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உலகெங்கிலும் தொல்பழங்கால மனிதர்களின் வரலாற்றை கண்டறிய கிடைக்கும் சான்றுகள் கல் ஆயுதங்களும், பாறை ஓவியங்களும் தான். சரியான ஓவியங்கள் உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கற்கால மனிதர்களின் கலை உணர்வையும், அவர்கள் வாழ்ந்த இடங்களையும், வாழ்க்கை முறையையும், சித்தரிக்கும் இம்மாதிரியான தொல் பழங்கால ஓவியங்கள் தமிழகம் முழுவதும் ஏராளமான இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, செத்தவரை, ஆலம்பாடி போன்ற இடங்களில் கிடைத்த ஓவியங்கள் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஓவியங்கள் சுமார் 3000 ஆண்டுகள் முதல் 7000 ஆண்டுகளுக்குள் இருந்தவை என தெரியவருகிறது என பழமைகளைக் கண்டறியும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த வகை ஓவியங்களை போன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா ரகுநாதபுரம் கிராமம் அருகே முருகன் மலை எனும் மலைக்குன்றில் இத்தகைய தொல்பழங்கால ஓவியத் தொகுப்பு தொகுதி ஒன்று உள்ளது. இந்த பகுதி உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்கோவிலூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த பழங்கால ஓவியங்களை பாறை ஓவிய ஆர்வலர் பழனிச்சாமி கண்டுபிடித்துள்ளார். இந்த ஓவியம் குறித்து ஓவிய ஆர்வலர் பழனிச்சாமி கூறுகையில்,
மிகவும் பழமை வாய்ந்த இந்த ஓவிய தொகுதி 4 மீட்டர் அகலமும் 2 மீட்டர் உயரமும் உள்ள பாறையில் வரையப்பட்டுள்ளது. இதில் மான், பறவை, மாடு ஆகிய உருவங்கள் வரையப்பட்டுள்ளன. பொதுவாக இம்மாதிரியான ஓவியங்கள் வெள்ளை மற்றும் செஞ்சாந்து நிறத்தில் இருக்கும். தமிழகத்தில் பெரும்பாலும் ஒற்றைத் தன்மை வாய்ந்த ஓவியங்கள் அதிகளவில் கிடைக்கின்றன.
அரிதாகவே இரண்டு, மூன்று வண்ணங்களில் ஓவியங்கள் தனித்தன்மையுடன் வரையப்பட்டதை பார்க்க முடியும். வகையில் அந்த வகையில் இந்த ஓவியங்களில் செஞ்சாந்து நிறத்தில் கோட்டுருவமாக வரைந்து பின்னர் உட்பகுதியில் செங்காவி வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ஓவியத்தின் சிறப்பு என்னவெனில் இவ்வோவியம் தொகுதியில் மாடுகள் மற்றும் மான் ஆகியவற்றின் உருவம் அதன் உள்ளுறுப்புகளுடன் வரையப்பட்டுள்ளது. இதனை எக்ஸ்ரே ஓவியங்கள் என்பர். இம்மாதிரியான ஓவியங்கள் மிக அரிதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. மேலும் இது அக்கால மக்களின் நுண்ணறிவை காட்டும் மிக முக்கிய ஆதாரமாகக் கருதலாம். விலங்குகளின் உயிரியல் இயக்கத்தை அறிய முற்பட்ட மனிதன் தங்கள் வேட்டையில் விழுந்த விலங்குகளின் உடல் உள்ளுறுப்புகளை விழந்து ஆய்ந்து அதன் வழியாக தன்னுடைய உடலின் இயக்கத்தையும் அறிய முற்பட்டதன் சான்றாகவே இவ்வகை ஓவியங்கள் உள்ளன என்பதை உலகின் பல தொல்லியலாளர்கள் ஏற்றுக்கொண்ட ஒருமித்த கருத்தாகும் என்றார்.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த பழங்கால ஓவியங்கள் இன்றளவும் வெயில் மழை என இயற்கைச் சீற்றத்திலும் அழியாமல் நிறம் மாறாமல் அப்படியே உள்ளது வியப்பிலும் வியப்பாக உள்ளது. மேலும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு சங்க செயலாளர் பாலமுருகன் கூறுகையில், இங்கே கிடைத்துள்ள பிற தடயங்களையும் கொண்டு பார்க்கும்போது, இங்கே கற்கால மனிதர்கள் முதல் பல்வேறு சமூகங்கள் குகை குன்றுகளில் வாழ்ந்து இருப்பதை அறிய முடிகிறது. இப்பகுதி தற்போதைய விவசாய நிலங்களில் பயன்பாட்டில் உள்ள செங்கல் சூளைகளுக்கு நடுவே உள்ளது. கல் குவாரிகளால் பல அரிய தொல்சின்னங்கள் அழிந்து வருகின்றன. இது இந்த வகை ஓவியங்கள் அவற்றில் இருந்து தப்பிப் பிழைத்துள்ளது அதிர்ஷ்டவசமானது. தொல் சின்னங்கள் மீது கவனம் கொண்டு அரசு இவ்வகை அழிந்துவரும் ஓவியங்களை காப்பாற்ற முன்வர வேண்டும். இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டால் தான் இந்த அரிய வகை ஓவியங்களை காப்பாற்றலாம் என்றார்.