பதிவு செய்த நாள்
30
ஜூலை
2020
04:07
ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் அடுத்த சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய அனுமதி தராமல், ஹிந்து அறநிலையத் துறையினர் அலட்சியமாக உள்ளதால், பக்தர்கள் வேதனைஅடைந்து உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், சோமங்கலம் கிராமத்தில், சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், நின்ற நிலையில் சுந்தரராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார்.இக்கோவில், 1073ல், முதல் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டது என, இக்கோவில் கல்வெட்டு மூலம் கண்டறியப் பட்டு உள்ளது.சேதம்கடந்த, 1999ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், அதன் பின், கோவிலில் புனரமைப்பு பணி நடைபெறவில்லை.இதனால், கருவறையின் உட்புறச் சுவர் மற்றும் வெளிப்பகுதியில் உள்ள கல்வெட்டுகளில், கறைகள் படிந்துள்ளன.கருவறையின் மேற்பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளதால், விரிசல் ஏற்பட்டுள்ளது. அர்த்த மண்டபம், மஹாமண்டபம் சேதமாகியுள்ளது. விமானத்தின் மேல் அமைந்துள்ள சுதை சிற்பங்கள் சிதிலமடைந்துள்ளன. தாயார் சன்னிதியின் சுற்றுச்சுவர் மற்றும் கோவிலின் பிரதான கதவுகள் பழுதடைந்துள்ளன.அறநிலையத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், புனரமைப்பு பணிக்கு அனுமதி கிடைக்காமல், கோவில் சிதிலம்அடைந்து வருகிறது.இது குறித்து, கிராம மக்கள் கூறியதாவதுஉபயதாரர்கள் மூலமாக, இந்த கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய தயாராக உள்ளோம். இதற்காக அனுமதி வழங்க கோரி, அறநிலையத் துறைக்கு, 2018ம் ஆண்டு மனு அளித்தோம்.தொடர்ந்து, தொல்லியல் துறை மற்றும் ஸ்தபதி, கோவிலை ஆய்வு செய்து, புனரமைப்பு பணிகள், தொல்லியல் விதிகளுக்குட் பட்டு, பழமை மாறாமல் புனரமைப்பு மேற்கொள்ள சான்று வழங்கினர்.ஆனால், இதை முறையான கோப்பாக தயாரித்து, மண்டல ஆணையருக்கு அனுப்ப வேண்டிய கோவில் செயல் அலுவலர், வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறார்.காலம் தாழ்த்தல்கோவூரில் உள்ள செயல் அலுவலர் அலுவலகத்திற்கு நேரில் சென்றால், அலுவலகத்தில் செயல் அலுவலர் இருப்பதில்லை. கைபேசியில் தொடர்பு கொண்டாலும், தொடர்பை துண்டித்துவிடுகிறார். இதனால், கும்பாபிஷேகத்திற்கான அனுமதி கிடைக்காமல் உள்ளது.ஹிந்து அறநிலையத் துறை ஆணையர், அமைச்சருக்கு பல முறை மனு அளித்துள்ளோம். ஆனால், துறை சார்ந்த அலுவலர்கள், உரிய ஆணையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.